Sunday, October 13
Shadow

குதிரைவால் விமர்சனம்

வங்கி காசாளராக பணிபுரியும் சரவணன் (கலையரசன்) ஒருநாள் தனது கனவில் வால் இல்லாத குதிரையையும், சூரியன் மற்றும் சந்திரன் என இரண்டையும் ஒரே நேரத்தில் வானத்தில் காண்கிறார். உறக்கத்தில் இருந்து எழும்போது அவருக்கு குதிரைவால் முளைத்துள்ளது. இதன்பின் தனது பெயரை மறந்து தன்னைத் தானே ஃபிராய்ட் என அடையாளப்படுத்திக்கொண்டு வால் முளைத்த காரணத்தை தேடி அலைவதே ‘குதிரைவால்’ படத்தின் கதையும் திரைக்கதையும்.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கலையரசன், வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பிற்கு தீனி போடும் கதாபாத்திரம். அதை உணர்ந்து திறமையாக நடித்து இருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை உடல் மொழி மாறாமல் நடித்திருப்பது பாராட்டுக்குரியது.
நாயகியாக வரும் அஞ்சலி பாட்டீல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆங்காங்கே நடிப்பில் பளிச்சிடுகிறார். சேத்தன், ஆனந்த்சாமி, செளமியா, மானசா, பரிதிவாலன், ஆறுமுகவேல், லட்சுமி பாட்டி, ஆதிரா பாண்டிலட்சுமி உள்ளிட்ட பலரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக குதிரைவால் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர். இவர்களின் புதிய முயற்சி வரவேற்க தக்கவையாக இருந்தாலும், அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் சென்றடையுமா என்பது சந்தேகம். இராஜேஷின் கதை, திரைக்கதை, வசனத்திற்கு ஏற்றார்போல் கடின உழைப்பை கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார்கள். பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை படக்குழுவினர் கொடுத்திருக்கிறார்கள். கனவுக்கும் நனவுக்கும் இடையேயான பயணத்தை திரை சொல்லலில் எங்கேயும் சமரசம் இல்லாமல் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.
கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு, கிரிதரனின் படத்தொகுப்பு பணி ஆகியவை படத்திற்கு பலம். பிரதீப் குமார், மார்டின் விஸ்ஸர் ஆகியோரின் பின்னணி இசை மூலம் திரைக்கதையை அழகாக கடத்தி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘குதிரைவால்’ புதிய முயற்சி.