Thursday, February 13
Shadow

‘Laththi’ Tamil Movie Review

Laththi Tamil Movie Rating: 3.5/5

விஷாலுக்கு இது பெயர் சொல்லும் படமாக இருக்கும். இதற்கு முன் இருந்த விஷாலுக்கும், இந்த விஷாலுக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது.
போலீஸ் ஆணையர், உதவி ஆணையர், ஆய்வாளர், எஸ்.ஐ., என ஹீரோக்களின் காவல்துறை கதாபாத்திரங்களைப் பார்த்த நமக்கு, கான்ஸ்டபிள் ஒருவரின் காவல்துறை கதை தான், லத்தி.

சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார் விஷால். அழகான மனைவியாக சுனைனா. ஒரு குழந்தை. அன்பான குடும்பமும், ஆசையான வேலையுமாய் நகர்கிறது விஷாலின் வாழ்க்கை.

திடீரென ஒரு கற்பழிப்பு வழக்கு. அதில் தொடர்புடையவர்களை அடித்துத் துவைக்கிறார் விஷால். அடிபட்டவர்கள், மனித உரிமைகள் ஆணையத்தை நாட, விஷால் சஸ்பென்ட் செய்யப்படுகிறார். ஒரு வருடத்திற்குள் அந்த விவகாரத்தை முடித்தால் தான், பதவி உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும் என்கிற கட்டாயம்.

 

காவல்துறை உயர் அதிகாரிகள் பலரையும் நாடும் விஷாலுக்கு ஏமாற்றமே கிடைக்கிறது. இதற்கிடையில் காவல்துறை உயர் அதிகாரி பிரபு சந்திப்பு மூலமாக, அவருக்கு சில உதவிகள் கிடைக்கின்றன. இதற்கிடையில் பிரபுவின் மகளுக்கு, பிரபல தாதா சுறாவின் மகன் வெள்ளையாக வரும் ராணா மூலம் ஒரு வித தொல்லை வருகிறது.

இதைக் கேட்கும் பிரபுவால், சர்வ அதிகாரம் படைத்த ராணாவை எதுவும் செய்ய முடியவில்லை. ஒருநாள் தற்செயலாகப் பிரபுவிடம் சிக்குகிறார் ராணா. அந்த நேரத்தில் பிரிபுக்குக் கையில் அடிபட்டிருக்க, அவரை அடிக்க விஷால் உதவியை நாடுகிறார் பிரபு.

‘லத்தி’ ஸ்பெஷலிஸ்டான விஷால் வந்து, ராணாவை அடித்துத் தொங்கவிடுகிறார். அப்போது தான், ராணாவின் உடலில் உள்ள ஒரு அடையாளத்தைக் காண்கிறார். முன்பு விஷாலுக்கு பிரச்சினையைத் தந்த கற்பழிப்பு வழக்கில், ராணா தான் பிரதான குற்றவாளி என்பது தெரியவருகிறது.

இதற்கிடையில் அடையாளம் தெரியாமல் இருக்க, முகமூடி போட்டு தன்னை தாக்கிய பிரபு மற்றும் விஷாலை எப்படியோ அடையாளம் கண்டுகொள்கிறார் ராணா. ராணா-விஷால் சந்திப்பு என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தியது? ராணாவை என்ன செய்தார் விஷால்? விஷாலை என்ன செய்தார் ராணா? என்பது தான் இரண்டாம் பாகத்தின் க்ளைமாக்ஸ்.

விஷாலுக்கு இது பெயர் சொல்லும் படமாக இருக்கும். இதற்கு முன் இருந்த விஷாலுக்கும், இந்த விஷாலுக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது. சுனைனா… அப்படியே ஒரு கான்ஸ்டபிள் மனைவியாக வாழ்ந்திருக்கிறார். அவர்களின் பையனும் தான்.

முதல் பாதியில் பார்க்கும் காட்சிகளுக்கு இரண்டாம் பாதியில் வேறு ஒரு சஸ்பென்ஸ் கொடுத்திருக்கும் இயக்குநர் வினோத்தின் திரைக்கதை அருமை. அதே நேரத்தில், ஒரு கட்டடத்தையே நீண்ட நேரம் கதைக்களமாக வைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையும், பின்னணியும் பிரமாதம் இல்லை. சராசரியைத் தான் இந்த படத்தில் தந்திருக்கிறார் யுவன். காவல்துறை பணியை உயர்த்தி பிடித்திருக்கிறார்கள். அதைச்சுற்றி களம் அமைத்திருக்கிறார். பார்க்கும் படி தான் இருக்கிறது.

பாலசுப்பிரமணியம் மற்றும் பாலகிருஷ்ணா தோட்டாவின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கான ட்விஸ்டிற்கு உதவியிருக்கிறது. ரமணா,நந்தா இவரும் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தை வழக்கம் போல ரெட்ஜெயண்ட் வெளியிட்டிருக்கிறது.

சண்டைக் காட்சிகளும், சஸ்பென்ஸ் காட்சிகளும், உணர்வுப்பூர்வமான காட்சிகளும், அனைத்து தரப்பினரையும் திரையரங்கத்துக்கு அழைத்து வர வாய்ப்பிருக்கிறது.