Sunday, November 3
Shadow

மாறன் விமர்சனம்

சிறுவயதில் தாய், தந்தையை இழந்த நாயகன் தனுஷ், தனது தங்கை ஸ்ம்ருதி வெங்கட்டுடன் தாய்மாமா ஆடுகளம் நரேன் அரவணைப்பில் வளர்கிறார். தனுஷின் தந்தை ராம்கி நேர்மையான பத்திரிகையாளராக இருப்பதால் ரவுடி கும்பலால் கொலை செய்யப்படுகிறார்.

தந்தையை போலவே நேர்மையான பத்திரியாளராக இருக்கிறார் தனுஷ். இந்நிலையில் அரசியல்வாதியாக இருக்கும் சமுத்திரக்கனி செய்யும் தவறுகளை கண்டுபிடித்து பத்திரிகையில் எழுதுகிறார். இதனால் கோபமடையும் சமுத்திரக்கனி தனுஷை பழிவாங்க நினைக்கிறார்.
இறுதியில் சமுத்திரக்கனி தனுஷை பழிவாங்கினாரா? சமுத்திரகனியிடம் இருந்து தனுஷ் தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தனுஷ், முதல் பாதியில் இளமை துள்ளலுடன் கெத்தானா நடிப்பையும், இரண்டாம் பாதியில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதுவான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக தங்கை பாசத்தில் பளிச்சிடுகிறார்.
நாயகியாக வரும் மாளவிகா மாடர்ன் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்கிறார். தங்கையாக வரும் ஸ்ம்ருதி வெங்கட் துறுதுறு நடிப்பால் பளிச்சிடுகிறார். அரசியல்வாதி சமுத்திரக்கனி, தாய்மாமா ஆடுகளம் நரேன், தந்தை ராம்கி ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார் அமீர்.
பத்திரிகையாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். அண்ணன், தங்கை பாசம், அப்பா, மகள் பாசம், திரில்லர் என கலந்து திரைக்கதை அமைத்து கொடுத்திருக்கிறார். ஆனால், திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் பயணிப்பது பலவீனமாக அமைந்திருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பொல்லாத உலகம் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு அருமை.