தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ண அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தும் முகாமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அண்மையில் சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட செய்தியில், கோரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படாத வீடுகள், விடுதிகள் இருந்தால் தற்காலிகமாக கொடுத்து உதவலாம் என்று வேண்டுகோள் விடுத்தது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் முகாமாக பயன்படுத்திக்கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கும், அது சார்ந்த அரசின் மற்ற அறப் பணிகளுக்கும், வாழ்ந்த காலத்தில் மக்கள் நலம் காக்க வாழ்ந்த கலைஞர் பெயரால் அமைந்த அரங்கத்தை அரசு பயன்படுத்த உள்ளார்ந்த விருப்பத்தை தெரிவித்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட ஒப்புதல் கடிதத்தை திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளார் சேகர்பாபுவும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் நேரில் அளித்தனர்.
இதே போல, திருச்சியில் உள்ள திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தை கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்திக்கொள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட சுகாதார அலுவலரிடம் ஒப்புதல் வழங்கினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை தற்காலிகமாக அளிக்க அனுமதி அளித்திருபதற்கு பலரும் பாராட்டுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.