Wednesday, September 27
Shadow

விஷால் உனக்கு இருக்கு ஆப்பு! இதுதான் ஆரம்பம். இன்றுமுதல் நீ தூங்கமாட்டாய் : மிஷ்கின் ஆவேசம்

தன் மீது விஷால் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் மிஷ்கின் பதில் அளித்துள்ளார்.

2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். துப்பறிவாளன் படத்தில் நடித்த பிரசன்னாவும் இதில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு லண்டனில் தொடங்கியது. எனினும் சமீபகாலமாக மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. படத்தின் பட்ஜெட் தொடர்பாக மிஷ்கின் – விஷால் நட்பில் விரிசல் ஏற்பட்டது. இதனால் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறினார். இதையடுத்து படத்தைத் தானே இயக்க முடிவெடுத்துள்ளார் விஷால்.

துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குவது அதிகாரபூர்வமாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குகிறார்.

துப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து விஷால் அறிக்கை வெளியிட்டார். அதில், மிஷ்கினின் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாகச் சாடியிருந்தார். இந்த அறிக்கையின் ஒரே நோக்கம், இதுபோன்ற நபர்களுக்கு, வேறு எந்தத் தயாரிப்பாளர்களும் இரையாகாமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே. மிக முக்கியமாக, எந்தவொரு தயாரிப்பாளரும் இத்தகைய சோதனையை சந்திக்கக்கூடாது என்று அறிக்கையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் கண்ணாமூச்சி இணையத் தொடரின் விழாவில் மிஷ்கின் கலந்துகொண்டபோது, துப்பறிவாளன் 2 படப்பிரச்னை குறித்து ஆவேசமாகப் பேசினார். அவர் பேசியதாவது:

ஒட்டுமொத்த சமூகமும் விஷாலை மோசமாகப் பேசியபோது அவனை என் தோளில் போட்டு சகோதரனாகப் பாவித்தேன் (மிஷ்கின் தன்னுடைய பேச்சில் விஷாலை அவன் இவன் என்றுதான் பேசினார்). ஒருவருடமாக யோசித்து துப்பறிவாளன் 2 கதையை எழுதினேன். கடைசிக்காட்சியை எழுத 10 நாள்கள் ஆயின. அப்போது மிகுந்த வேதனையை அனுபவித்தேன்.

2018-ல் துப்பறிவாளன் வெளியாகி, வெற்றி பெற்றது. அப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை எடுக்கப் பணமில்லை. இதனால் 4 நாள்கள் எடுக்கவேண்டிய காட்சியை 6 மணி நேரத்தில் எடுத்தேன். அதற்கு முன்பு வெளியான விஷால் நடித்த 3 படங்கள் ஓடவில்லை. துப்பறிவாளன் படத்துக்கு எனக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ. 3 கோடி.

துப்பறிவாளன் 2 கதை விஷாலுக்கு மிகவும் பிடித்துப்போனது. முதலில் வேறு தயாரிப்பாளர் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், விஷால் தான் இந்தப் படத்தைத் தானே தயாரிப்பதாகக் கூறினான் வேண்டாம், உனக்குக் கடன் இருக்கிறது. உன்னால் முடியாது. இதற்கு ரூ. 20 கோடி செலவாகும். ஆக்‌ஷன் படம் அடுத்ததாக வெளிவருகிறது. அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்றால் உன் மீது பாரம் ஏறும் என்றேன். ஆனால் பிடிவாதமாக இருந்ததால் துப்பறிவாளன் 2 படத்தை அவனே தயாரித்தான். இந்தக் கதையை வைத்து அனைத்துக் கடன்களையும் அடைத்துவிடுவேன் என்றான். இதை துப்பறிவாளன் 3-யாக வைத்துக்கொள்ளலாம். சென்னையில் நடப்பதுபோல ஒரு கதையை துப்பறிவாளன் 2-வாக எடுக்கலாம் என்றேன். ஆனால் அவன் பிடிவாதமாக இருந்தான்.

கதையை எழுதுவதற்கு நான் கேட்டது ரூ. 7.50 லட்சம் மட்டுமே. ஆனால் ரூ. 7 லட்சம் மட்டும்தான் செலவு செய்தேன். இப்போது திரைக்கதை எழுத ரூ. 35 லட்சம் செலவு செய்ததாகக் கூறுகிறான். இதை விஷால் ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டும். கதை எழுதுவதற்கு ஒருவன் ரூ. 35 லட்சம் செலவழிக்கிறான் என்றால் அவன் இயக்குநராவதற்கே தகுதியற்றவன்.

32 நாள்கள் படப்பிடிப்பு நடந்தது. இதுவரை ரூ. 13 கோடி செலவு செய்ததாகக் கூறுகிறான். இதையும் விஷால் நிரூபிக்கவேண்டும்.

என் தாயை அசிங்கமாகத் திட்டினான் விஷால். என் தாயை அசிங்கமாகத் திட்டியபிறகு படத்திலிருந்து எப்படி விலகாமல் இருக்கமுடியும்? நான் செய்த ஒரே துரோகம், அவனிடம் அறத்துடன் இருந்ததுதான். எந்தத் தயாரிப்பாளரும் எனக்குப் படம் கொடுக்கக்கூடாது என்கிறான். என்னால் எங்கேயும் வேலை செய்ய முடியும். என் படங்கள் சொல்லும் நான் யார் என்று. 10 நாள்களாக என் அலுவலகத்துக்கு வந்து, கதையைக் கொடு, என்.ஓ.சி. கொடு என்று என் உயிரை எடுத்து அவற்றை வாங்கிச் சென்றார்கள். நான் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கோ, இயக்குநர்கள் சங்கத்துக்கோ சென்றிருந்தால் விஷாலால் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்க முடியுமா? விஷாலுக்குக் கதை பற்றி தெரியுமா? நீ யார் என்பது சமூகத்துக்குத் தெரியும். 9 மணிக்கு தேர்தலில் நாமினேஷன் பண்ண பொறுக்கி. சமுகம் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

ரமணாவும் நந்தாவும் உன்னை நடுத்தெருவில் நிற்கவைப்பார்கள் என்று சொன்னேன். அதுதான் நடந்தது. இன்று படம் நின்றுபோனதற்கு அவர்கள்தான் காரணம்.

என் தம்பியை அடித்தார்கள். இனிமேல் விடமாட்டேன். தமிழ்நாட்டில் நான் மட்டும்தான் விஷாலைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டேன். இனி, தமிழ்நாட்டை அவனிடமிருந்து பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். இவன் யார்? இங்கே எல்லாம் ஆள்களே கிடையாதா? இவர்தான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வந்தாரா? இது ஒரு தமிழனின் கோபம். இப்போது நான் பொறுமையாக இருப்பதற்குக் காரணம், என் தாத்தன் எழுதியுள்ளான். இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்று. அந்தத் தமிழால் நான் அமைதியாக இருந்தேன்.

சம்பளம் பற்றிய பேச்சின்போது துப்பறிவாளன் ஓடவில்லை என்றான். பிறகு ஏன் துப்பறிவாளன் 2 எடுக்கிறாய் என்றால் கதை பிடித்தது என்கிறான். இப்போது ஒப்பந்தம் பண்ணிக்கொள்ளவேண்டாம். சைக்கோ படம் வெளியாகி ஓடினபிறகு எனக்குச் சம்பளமாக ரூ. 5 கோடி கொடு என்றேன். சைக்கோ நன்கு ஓடிய பிறகு அவனிடம் போய் சம்பளம் பற்றிப் பேசினேன். சைக்கோ ஓடலைங்க, நீங்கதான் ஓடுச்சுனு சொல்றீங்க என்கிறான். சரி என்று வெளியே வந்தபோது என் அம்மாவைக் கெட்டவார்த்தைகளில் பேசினான். இதை என் தம்பி எதிர்த்துக் கேட்டதற்கு அவனை அடித்துவிட்டான். இதை நான் பத்திரிகைகளில் சொன்னேனா? தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் சென்றேனா? காரணம், மூன்று வருடம் அவனைத் தம்பி என அழைத்துள்ளேன்.

விஷால், உன் பூச்சாண்டி வேலைகளையெல்லாம் காட்டவேண்டாம். உனக்கு இருக்கு ஆப்பு! இதுதான் ஆரம்பம். இன்றுமுதல் நீ தூங்கமாட்டாய். உன் பக்கம் தர்மம் இருந்தால் வா குருஷேத்ரப் போருக்கு. வா போரிடலாம் என்று ஆவேசமாகப் பேசினார்.