பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அன்பு சகோதரர் நெல்லை பாரதி அவர்கள் இன்று அதிகாலை காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்
வீட்டு முகவரி:8/9 ஐந்தாவது தெரு
பிருந்தாவன் நகர்
வளசரவாக்கம்
(கேசவர்த்தினி எதிரில்)
சென்னை
மறைந்த திரு நெல்லை பாரதி பற்றி பிஆர்ஓ அந்தணர்
அந்தணர்… என்பார் நெல்லை. அந்த ‘ர்’ ஒரு நாள் கூட ‘ன்’ ஆனதில்லை. கடைசிகாலத்து நெல்லை எனக்கும் பிடிக்காமல்தான் போனார். சுழல் இழுத்துக் கொண்டதை போல, அவரை இழுத்துக் கொண்டது அது. இந்த நேரத்தில் நெல்லை பாரதி பற்றிய நினைவுகள் பொங்கி வந்தாலும், நான் எப்பவோ எழுதிய ஒரு சிறுபதிவை மீள் பதிவு செய்கிறேன். அவரை பற்றி பேச இன்னும் இன்னும் நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கின்றன. போய் வாருங்கள் நெல்லை! அடுத்த பிறவியில் ‘தண்ணியில்லா’ காட்டில் பிறக்க பிரார்த்தனைகள்!
நெல்லை பாரதி அப்போது ஒரு புலனாய்வு இதழில் நிருபராக இருந்தார். காலை பத்து மணிக்கு சுமாருக்கு இவர் வந்து கொண்டிருந்த பஸ்சில் ஏறினார் செக்கர் ஒருவர். நல்ல கோடை காலம். பஸ்சை ஜெமினி பாலம் அருகே ஓரம் கட்டிவிட்டார் டிரைவர். டிக்கெட், டிக்கெட்… என்று பரிசோதித்துக் கொண்டே வந்தார். அதற்குள் பலர் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…. என்று பெருமூச்சு விட்டார்கள். அடிக்கடி வாட்சை பார்த்துக் கொண்டார்கள் பலர். ஏனென்றால் அது அலுவலகம் போகிற நேரம்.
பாரதி சும்மாயில்லாமல், “பீக் அவர்ஸ்ல செக் பண்றீங்க. பரவால்ல. வண்டிய எதுக்கு நிறுத்தறீங்க? அது பாட்டுக்கு போகட்டுமே, நிறைய பேரு ஆபிசு போகணும்லே…” என்றார். செக்கருக்கு மூக்கு மேல் மிளகாய் பொறிந்தது. “யோவ்… முதல்ல உன் டிக்கெட்டை எடு” என்றார். அவ்வளவுதான், பாரதிக்குள் இருந்த அயோத்தி குப்பம் வீரமணி ‘விசுக்’ என்று எழுந்து கொள்ள, செக்கரை இரண்டு கைகளாலும் இறுக கட்டிக் கொண்டார். “டேய்… மாப்ளே, இவனை ஒரு போட்டோ எடு. முதல் பக்கத்திலே போட்டு தாளிச்சிடலாம்” என்றார். பக்கத்தில் இருந்த போட்டோகிராபர் அவசரம் அவசரமாக கேமிரா பையை ஓப்பன் செய்ய, அடடா… பத்திரிகைகாரனுககிட்ட மாட்டிகிட்டமே என்பதை உணர்ந்து பாரதியின் கைகளில் இருந்து பிடுங்கிக் கொண்டு பஸ்சில் இருந்து கீழே குதித்தார் செக்கர்.
பின்னாலேயே நெல்லை பாரதியும் குதிக்க, அயன் படத்தில் வருகிற மாதிரி பிரமாதமான சேசிங். கொஞ்ச து£ரம் விரட்டிக் கொண்டே ஓடிய நெல்லை பாரதி, பின்னால் திரும்பி செக்கர் வந்த ஜீப்பை பார்த்ததும் ஓட்டத்தை நிறுத்திவிட்டார். “எப்படியிருந்தாலும், இந்த ஜீப்பை எடுக்க நீ வந்துதானே ஆகணும் மாப்ளே, வா” என்பது அவரது கணக்கு. பஸ்சை போக சொல்லிவிட்டு இவரும் போட்டோகிராபரும் செக்கரின் ஜீப்பில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். நேரம் கடந்து கொண்டிருந்தது. இவர்களும் போவதாக இல்லை. செக்கரும் வருதாக இல்லை. சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஒருவர் மெல்ல இவர்கள் அருகில் வந்து, “சார்… செக்கரு தெரியாம பண்ணிட்டாராம். உங்களுக்கு பயந்து வள்ளுவர் கோட்டம் சந்துக்குள்ளே நிக்கிறார். நீங்க போயிட்டீங்கன்னா இந்த ஜீப்பை எடுத்திட்டு போயிடுவாராம்” என்றார். “எங்க நிக்கிறாரு, காட்டு?” என்று வந்தவரை இழுத்துக் கொண்டு கிளம்பினார்கள் நெல்லையும், போட்டோகிராபரும்.
சொன்ன மாதிரியே வள்ளுவர் கோட்டம் சந்துக்குள் பம்மிக் கொண்டு நின்றார் செக்கர். து£ரத்திலேயே அவரை பார்த்துவிட்ட நெல்லை, பின்புறமாக ஓடிப்போய் அவரை இறுக்கமாக கட்டிக் கொண்டார். “டேய் மாப்ளே, எட்றா போட்டோவ” என்றார். செக்கர் திமிர, நெல்லை இறுக்க, இறுதி வெற்றி போட்டோகிராபருக்கு.
மார்பளவு போட்டோ போதும் என்றாலும், பின்னால் நின்று இறுக்கிய பாரதியின் கைகளும் அந்த மார்பளவு போட்டோவில் மறைக்க முடியாமல் விழுந்திருந்தது. “போடுங்க அந்த கையோடவே” என்றார் எடிட்டர். எல்லாருக்கும் கையளவு மனசு.
பாரதிக்கு மட்டும்தான் ‘கையளவு’ துணிச்சல்!
பாரதி பற்றிய ரிப்போர்ட்டர் கவிதா
நெல்லை பாரதி அவர்கள்….
வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்பதை நமக்கு பதிவு செய்து விட்டு சென்றிருக்கிறார்.. அந்த மது பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், மதுவின் பிடியிலும் சிக்கி இருக்க மாட்டார்..மரணத்தின் பிடி யிலும் சிக்கி இருக்க மாட்டார்..கடைசி கால வாழ்க்கையில் அத்தனை சிரமங்களையும் அவஸ்தை பட்டே அனுபவித்தார் .ஒரு நாள் அவரது மகனை கல்லூரியில் சேர்க்க பரிந்துரை கடிதம் கேட்டார்,, நானும் கொடுத்து மகனை சேர்த்து விட்டார்..அந்த நாள் முதல் சில பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்த சில சம்பவங்களின் போதும், களேபரங்களின் போதும் நான் சொல்வதை கேட்டுக் கொண்டார்..அநேகமாக பெண் பத்திரிகையாளர்களில் நான் மட்டுமே அவரோடு அதிகமாக பேசி இருக்கிறேன்…சண்டை போட்டு இருக்கிறேன்.. எல்லாவற்றையும் விட்டு விட சொல்லி வற்புறுத்தி இருக்கிறேன்.நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும்..ஒரு நாள் அவரிடம் நான் கோபித்துக் கொண்டதும்….சில சந்தோஷங்களுக்காக பல வெற்றிகளை தொலைத்தவர் நெல்லை பாரதி…வருங்கால சந்ததியினர்க்கு வீல் சேரில் வந்து தன் கடமையினை பதிவு செய்தவர். நல்ல கவிஞனாக பாடல் ஆசிரியராக அடையாளப்பட வேண்டியவர், காலத்தின் பிடியில் சிக்கி கண்ணீரில் நம்மை மூழ்கடித்து விட்டார்…சில நினைவுகள், சில நிஜங்கள்….மறக்க முடியாது,,அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு ஆறுதல் சொல்ல வார்த்தை இன்றி வருந்துகிறேன். அவர் ஆன்மா அமைதி பெறட்டும்…
நெல்லை பாரதி பற்றி பிஆர்ஓ யூனியன் செயலாளர் பெரு துளசி பழனிவேல்
அன்புச் சகோதரர்நெல்லை பாரதி மொழி பற்றுக் கொண்டவர். தமிழாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தக் கூடியவர்.புதுப்புது தமிழ் வார்த்தைகளை கண்டுபிடித்து எழுதக் கூடியவர். அவரது கவிதையாற்றல் நகைச்சுவை கலந்த பேச்சாற்றல் பத்திரிகையில் எழுதும் போது வெளிப்படும் அவரது அழகான உரைநடை த்தமிழ் அனைவரையும் கவர்ந்து விடும்.
சக பத்திரிகை நண்பர்களின் படைப்புகளை படித்து விட்டு மனம் திறந்து பாராட்டக் கூடியவர். அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். என்னுடை சினிமா சம்பந்தப்பட்ட புதிய தொடர்வண்ணத்திரையில் வெளிவருவதற்கு பேரு தவிபுரிந்தவர்.
அவர் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் தன்னைச் சுற்றியுள்ள நண்பர்களை கலகலப்பாக மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்.கள்ளக படம், சூழ்ச்சி தெரியாத நல்ல மனிதர். அவரது இழப்பு தமிழ் படைப்புலகிற்கு பேரிழப்பு. அவரதுஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதியைப் பற்றி இயக்குனரும் பிஆர்ஓ மான முத்துராமலிங்கம்
நண்பன் நெல்லை பாரதி இல்லை என்கிற செய்தி,கொரோணாவைவிட கொடியதாக இருக்கிறது. 89-களின் இறுதியில் எங்கள் சந்திப்பு நேர்ந்தது.முதல் சந்திப்பின் ஞாபகம் உறுதியாக தெரியவில்லை! இப்போது நீங்கள் பார்த்த நெல்லை பாரதி கிடையாது ; பேரழகன். அது தெரிந்தே அவனுக்கு அவனது பெற்றோர் வேல்முருகன் என்று பெயர் வைத்ததக்காக ‘கூடி’களிக்கும் போது ஒரு முறை சொன்னான்.
அப்பறம் எப்படி நெல்லை பாரதி…!? அடிப்படையில் கம்யூனிஸ்ட். பெரியார் மீது பேரன்பு கொண்டவன்.பதிரிகையுலக்கின் ஆரம்ப காலங்களில் அவன் எழுத்துக்களில் அந்த வீரியம் பட்டவர்த்தனமாகத் தெரியும்.வாச்சாத்தி வன் கொடுமை குறித்து இந்த உலகுக்கு விழாவாரயாகச் சொன்னதில் இவனது பங்களிப்பு அதிகம்.அவன் ஒரு போதும் தன்னை சினிமா பத்திரிகையாளனாக நினைத்ததே இல்லை! அரசியல் சார்ந்தும்,இலக்கியம் சார்ந்தும் இயங்கவே பெறும் விருப்பம் கொண்டிருந்தான்.
எவ்வளவு துயரத்துலிருந்தாலும்,அதை ஒரு போதும் வெளிக்காட்டிக்காமல்,தன்னைச்சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கவே பிரியப்படுவான்.அவனது இயல்பான நகைச்சுவை உணர்வு எப்போதும் எனக்குள் பிரமிப்பை உண்டாக்கும். சரியான வழிகாட்டுதல் மட்டும் வாய்க்கப் பெற்றிருந்தால் தமிழ் சினிமாவில் கவணத்திற்குரிய படைப்பளியாகவோ,பாடலாசிரியராகவோ வந்திருக்க வேண்டியவன்.அல்லது முழு நேர பத்திகையாளனாகவே இருக்கலாம் என்று முடிவெடுத்திருந்தாலும் இன்றைக்கு மீடியாவில் தவிர்க்க முடியாத நபராக இருந்திருப்பான்.
எதிர்காலம் குறித்து அவனுக்கு பெரிய திட்டமிடல் கிடையாது! இன்றைய நாளில் நிறைவாக என்ன செய்தோம் என்பதை மட்டுமே வாழ்வின் இறுதிநாள் வரை ‘வாழ்ந்துவிட்டு’ செத்திருக்கான். கடந்த முப்பது ஆண்டுகளில் நான் பல்வேறு படைப்பாளிகளை,பத்திரிகையாளர்களை பார்த்திருக்கிறேன்.எது குறித்து கேட்டாலும் புள்ளி விபரங்களோடு அது குறித்து பேசுகிறவர்கள் பலர் உண்டு.நெல்லை பாரதி அளவுக்கு பிரமிக்க வைத்தவர்கள் குறைவே..! காரணம்,நான் வியந்த பலருக்கு ‘உப’திரவ பழக்கம் இல்லை… அல்லது எனக்கு தெரியவில்லை! இன்றைய பதிவுகளில் சில தம்பிகள் சினேகாவின் காதலர்கள் பட விழாவில் உபதிரங்களாலும் ‘உப’ திரவங்களாலும் பேச முடியவில்லை என்று அவன் தன்னைத்தானே சுய விமர்சனம் செய்தது குறித்து குறிப்பிட்டிருந்தார்கள்.
‘உப’ திரவங்களில் இருக்கும் போது அவனால் பேச முடியாமல் போயிருந்திருக்கலாம்.. வார்த்தை குழறியிருக்கலாம்… அது போன்ற சந்தர்ப்பங்களில் அவனிடம் சங்க இலக்கியம் குறித்தோ,அவன் பிறப்பதற்கு முன்னாள் வெளிவந்த ஏதாவது ஒரு பாடல் குறித்தோ கேட்டு பார்த்தீர்களா என்று தெரியவில்லை! ” எஞ் செல்லம்… கோவுச்சுக்காத…” என்று தொண்டையைக் கனைத்து,கண்களை சிமிட்டி, சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்துவிட்டு சொல்லுவான் பாருங்கள்…! வார்த்தையில் பிசிர் இருக்காது… புள்ளிவிவரங்களில் ஒரு கமா, செமிக்கோலன் கூட மிஸ் ஆகாமல் சொல்லுவான் என் நண்பன் நெல்லை பாரதி!
குடி அவனைக் கொன்று விட்டதாகக்கூட சிலர் பதிவு செய்திருந்தார்கள்.அவன் அப்படியெல்லாம் பெரிய குடியாளி கிடையாது.திருநெல்வேலியில் இருந்து என்ன கனவுகளோடு கிளம்பி வந்தானோ,அந்த இலக்கை எங்கோ கோட்டைவிட்டுட்டோம் என்கிற மனக்குறையே அவனை கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை மறக்கச் செய்துவிட்டது. அதற்கு அவன் மீது எவ்வளவு பிழை இருக்கிறதோ,அதைவிட பன்மடங்கு இந்த சமூகம் நல்ல படைப்பாளிகளுக்கு சில நேரங்களில் உரிய அங்கீகாரம் கொடுக்க மருத்ததும் ஆகப்பெறும் பிழை…!?
கடந்த சில வருடங்களாக உடல் ரீதியாகவும்,மனதளவிலும் அவன் கொண்ட துயரங்கள் அநேகம்…ஒரு வகையில் அவனுக்கு இது விடுதலையே… போய் வாடா என் தங்கம்…
நெல்லை பாரதியை பற்றி இயக்குனரும் பிஆர்ஓ மான விண் ஸ்டார் விஜய் கூறியதாவது
நன் தயாரிக்கும் மக்கள் தொடர்பாளர் படத்தில் ஐயா அவர்களுக்கு ஒரு பாடல் கொடுத்துள்ளேன் அந்தப்பாடலை மிகச் சிறப்பாக எழுதிக் கொடுத்துள்ளார் அவருக்கு இந்த நேரத்தில் நான் நன்றியும் கடமைப்பட்டுள்ளேன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் அவர் எழுதிய கடைசிப் பாடல் இதுவாகத்தான் இருக்கும் இந்த ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் அவரது நினைவாக இந்த பாட லை வெளியிட இருக்கிறேன்..