Thursday, March 28
Shadow

கொரோனா அச்சம் தேவையில்லை பேரவையை ஒத்திவைக்க அவசியமில்லை: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையே இல்லை. சட்டமன்றத்தை ஒத்தி வைக்க வேண்டிய அவசியம்  இல்லை. அனைத்து உறுப்பினர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார். பேரவையில் நேற்று கொரோனா வைரஸ் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி ஆகியோர் பேசினர். இதற்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கொரோனாவால் தமிழ்நாட்டில் ஒருவர்தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட 8 கோடி பேர் தமிழகத்தில் இருக்கிறோம். காரோனா வைரஸ் ஒரு அபாயகரமான நோய் என்று உலக நாடுகளில் இருந்து செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. கிட்டத்தட்ட 136 நாடுகளில் பரவி இருப்பதாக செய்திகள் வருகிறது. இதை வைத்துதான் அச்சப்பட்டு கொண்டு இருக்கிறோம். இதில் அச்சப்பட வேண்டிய தேவையே இல்லை. சட்டமன்றத்தை ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

கொரோனா வைரஸ் நோய் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க அவ்வப்போது உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறேன். அரசு தலைமை செயலாளர் தலைமையில்  அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்ட சிறப்பு பணிக்குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த குழுவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், வருவாய் மற்றும்  பேரிடர் மேலாண்மை துறை செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளர், தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர், தொழில் துறை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், காவல்துறை தலைமை இயக்குநர், மருத்துவ கல்வி இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் இயக்குநர்,

மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநர், தெற்கு ெரயில்வே பொது மேலாளர், சென்னை விமான நிலைய இயக்குநர், சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவர், பொது சுகாதார துறையின் சார்பாக வல்லுனர் ஒருவரும், தனியார் துறை சார்பாக வல்லுனர் ஒருவரும் கொண்ட குழுவினை அமைக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த சிறப்பு பணிக்குழு, அவ்வப்போது சந்தித்து, அரசு வழங்கும் உத்தரவுகளை சரியான முறையில் அமல்படுத்தப்படுகின்றதா என்பதை தீவிரமாக கண்காணித்து, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தமிழ்நாட்டில் முழுமையாக தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.