Sunday, June 4
Shadow

ரகுவரன் எனும் மகா கலைஞன் !

வில்லன் நடிகர்களுக்கு ஒரு துரதிர்ஷ்டம்… நேரில் பார்த்தால் கூட, இவர் நடிகர் என்பதையெல்லாம் கடந்து திட்டுவார்கள். ஆனால் தமிழ்த் திரையில் வில்லன் நடிகர்களில் அதிர்ஷ்டக்காரர் என்றால் அவர் ரகுவரன்தான். ‘சார், மிரட்டிட்டீங்க’ ‘கொன்னுட்டீங்க’ என்றெல்லாம் சொல்லி கைகுலுக்கினார்கள். காரணம்… தனக்கே தனக்கென்று புதிதாய் கொண்டிருந்த ஸ்டைல். ரகுவரன் ஸ்டைல்!

தமிழ் கூறும் நல்லுலகில், எல்லோரையும் போலவே, ஹீரோவாகத்தான் அறிமுகமானார் ரகுவரன். அந்தப் படம் ‘ஏழாவது மனிதன்.’ ஆனால், ‘ரகுவரன் வித்தியாசமான மனிதர். அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது’ என்று நினைத்ததோ என்னவோ… ஹீரோவாக ரசிக்கவில்லை ரசிகர்கள்.

‘ஏழாவது மனிதன்’ படத்தின் ‘காக்கைச்சிறகினிலே’ பாடலையும் அடுத்து நாயகனாக நடித்த ‘ஒரு ஓடை நதியாகிறது’ படத்தின் ‘தலையைக் குனியும் தாமரையே’ பாடலையும் அப்படி ரசித்த அதேவேளையில், ஹீரோ அந்தஸ்து வழங்குவதில் தயக்கம் காட்டிக்கொண்டே இருந்தது வியப்புதான்.

82-ம் ஆண்டு சினிமாவுக்குள் நுழைந்த ரகுவரனுக்கு, 85-ம் ஆண்டு ரஜினி, சத்யராஜ் நடித்த ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் சின்னதான வாய்ப்பு, அதுவும் வில்லகுணம் கொண்ட வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. ஆனால் அதே வருடம் ஹீரோவும் இல்லாமல், வில்லனாகவும் இல்லாமல், அவர் நடித்த ‘சிதம்பரம்’ எனும் குணச்சித்திரக் கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டது. விசு இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் லட்சுமிக்கு ஜோடியாக, கஞ்சக்கணவனாக பிரமாதம் பண்ணியிருந்தார் ரகுவரன்.

மீண்டும் சின்னச்சின்ன வில்லன்கள் என தொடர்ந்து வலம் வந்துகொண்டே இருந்தார். அப்போதுதான் ஆர்.சி.சக்தியின் ‘கூட்டுப்புழுக்கள்’ படத்தின் நாயக வாய்ப்பு வந்தது. அமலா ஜோடி. அருமையான கதாபாத்திரம். மிகச்சிறந்த பண்பட்ட நடிப்பை வழங்கியிருந்தார். ஆனாலும் ரஜினிக்கு வில்லனாக, ‘ஊர்க்காவலன்’ படத்திலும் வந்தார் என்பதும் கூட, ரகுவரன் ஸ்டைல்தான் போல!

87-ம் ஆண்டு, ரகுவரனுக்கு மறக்கமுடியாத ஆண்டு. ’மக்கள் என் பக்கம்’ படத்தில், நெகட்டிவ் ஹீரோவாக சத்யராஜ் நடிக்க, அவருடன் துணை வில்லனாக நடித்த ரகுவரன் நடிப்பைத்தான் எல்லோருமே பாராட்டினார்கள்.

அடுத்து, இயக்குநர் பாசில் இரண்டு கைகளிலும் இரண்டு பதக்கங்களை வழங்கினார் ரகுவரனுக்கு. முதல் பதக்கம் ‘பூவிழி வாசலிலே’. கையில் ஊன்றுகோலும் மழித்த முகமும் கண்ணாடியும் கொண்டு, ஆனால் மொத்தக் கொடூரத்தனத்தையும் காட்டியிருப்பார் ரகுவரன். ‘கையில் கத்தி, முகத்தில் தழும்பு, கண்களில் ரத்தச்சிவப்பு என்றெல்லாம் இல்லாமல் கூட வில்லத்தனம் செய்யமுடியும் என ரகுவரன் நிரூபித்துவிட்டார்’ என அந்தப் படத்தின் விமர்சனங்களில் எழுதினார்கள். அதே பாசில், அதே ரகுவரனுக்கு, ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ வாய்ப்பை வழங்கினார். அதில் வேறொரு முகம் காட்டி வியப்பில் ஆழ்த்தினார் ரகுவரன்.

இந்தக் காலகட்டத்தில், மீண்டும் ஹீரோ அந்தஸ்துடன் திரையில் வந்தார் ரகுவரன். ஆனால், ஹீரோ ரகுவரன், வில்லன் ரகுவரனிடம் தோற்றுத்தான் போனார்.

‘அஞ்சலி’ படத்தில் அன்பைக் கொட்டியிருப்பார் ரகுவரன். ‘ஆண்டனி’யாக ‘பாட்ஷா’வில் பாட்ஷாவுக்கே ‘டஃப்’ கொடுத்து மிரட்டியிருப்பார். ஷங்கரின் ‘காதலன்’ படத்தில், அவரின் கேரக்டரும் அவரின் முகபாவனைகளும் மேக்கப்புகளும் திகில் கிளப்பிவிடும்.

இதையடுத்து இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வந்த ‘புரியாத புதிர்’ படத்தின் சைக்கோ கேரக்டரும் ‘I KNOW I KNOW I KNOW’ என்பதும் செம கை தட்டல்களைப் பெற்றுத் தந்தன. இவரின் உயரம், பார்வை, உடலை வைத்துக்கொள்ளும் பாடி லாங்வேஜ், வார்த்தைகளை சன்னமாகத் தொடங்கி, நடுவில் மென்று, கொஞ்சம் தின்று, பிறகு சத்தமாக்கிப் பேசிய அவரின் டயலாக் டெலிவரி… எல்லாமே ரகுவரன் ஸ்டைலாயிற்று. எல்லோருக்கும் பிடித்த நடிகரானார் ரகுவரன்.

இதையடுத்து, ரகுவரன் செய்தது எல்லாமே எல்லோருக்கும் பிடித்த கேரக்டர்களாகவே அமைந்தன. அப்படியொரு அப்பாவாக வலம் வந்தார். ‘உல்லாசம்’ ஜேகே கேரக்டர் செம கெத்து. ‘லவ் டுடே’ அப்பா சூப்பரு. ‘யாரடி நீ மோகினி’ அப்பா, வேற லெவல்.

அஜித்துடன் ‘அமர்க்களம்’ துளசியாக அமர்க்களப்படுத்தியிருப்பார் ரகுவரன். தமிழ் சினிமாவில், ஹீரோ வந்தால் கை தட்டல். ஹீரோயின் வந்தால் விசில் சத்தம். காமெடியன் வந்தால் செம சத்தம் என்கிற பட்டியலில், ரகுவரன் திரையில் என்ட்ரியாகும் போது, அப்படியொரு கை தட்டலும், விசிலும் பெருஞ்சத்தமும் பறக்கும். ’முகவரி’யின் அண்ணனை, தங்களின் அண்ணனாகவே நினைத்துக் கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தின் முதல்வர் கேரக்டரை, இவரைத் தவிர யார் செய்திருந்தாலும் சோபித்திருக்காது. சூப்பராக இருந்திருக்காது என்கிறார்கள் ரசிகர்கள். அந்தக் கேரக்டருக்கென தனி பாடி லாங்வேஜ் பிடித்திருப்பார் ரகுவரன்.

யாருடைய சாயலும் இல்லாத நடிகர் ரகுவரன். எவரின் நகலாகவும் இருக்கவில்லை அவர். தனக்கென தனிப் பாணி. இதுதான், இப்படித்தான், இதுமட்டும்தான் என்கிற வட்ட சதுரங்களில்லெல்லாம் அடைபடவில்லை அவர். அந்த ரகுவரன் ஸ்டைல் தனித்துவமானது.

காலவேகத்தில், மிகச்சீக்கிரத்தில் மரணம் அவரை எடுத்துக்கொண்டது. கடந்த 2008-ம் வருடம், மார்ச் 19-ம் தேதி அன்று ரகுவரன் எனும் மகா கலைஞன் காலமானார்.

ஆனால் காலம், ஒருபோதும் ரகுவரனை மறக்கவில்லை. ஒருநாளும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.

ரகுவரனின் இடத்தை நிரப்ப, இன்னும் எவரும் வரவில்லை. வரவும் முடியாது. அதுதான் ரகுவரன் ஸ்டைல்!