Sunday, January 29
Shadow

ரஜினி வேஷம் போடுகிறார் அது ஏன் மக்களுக்கு புரியவில்லை

இன்னும் கூட,ரஜினியை தூக்கிவைத்துக் கொண்டாடுகிறவர்களைக் காணும் போது!

உப்புக்கல்லை வைரமென்று சொன்னால்
அதை ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால்- நீ
கதறி என்ன? பதறி என்ன தோழா..!
ஒன்னுமே நடக்கல ரொம்ப நாளா?

என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

பயம்,குழப்பம்,மேட்டிமைத்தனம்,அரசியல் அறியாமை,பொய்மை…,என்ற கலவைகளுடன் ரஜினி அன்று தன்னை வெளிப்படுத்தினார்!

தன்னைப் பற்றி கட்டமைக்கபட்ட பொய் பிம்பங்களை தானே களைத்துவிட்டு, ’’என்னைவிட்டால் போதும்’’ என நிம்மதி பெருமூச்சுவிடக் கூடிய நிதர்சனத்திற்கு அவர் வந்திருப்பதும் நல்லது தானே..! என்று நினைத்தேன்! ஒரு வகையில் இனி நாம் அவரைப் பற்றி பேசவோ,விவாதிக்கவோ வேண்டாம் இன்று அவரே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்றும் நம்பினேன்!

ஆனால்,அவரது முட்டாள்த்தனமான வார்த்தைகளுக்கெல்லாம் சிலர் முட்டுக் கொடுத்து வளர்த்துச் செல்வதைக் கண்டால்..,’பாமரர்கள் தெளிவு பெற்று ஒதுங்கிச் சென்றாலும், படித்தவர்கள் அவர்களை குழப்பாமல் விடுவதில்லை…என்பது தான், கால் நூற்றாண்டுகால தமிழகத்தின் கழிசடை அரசியலாகவுள்ளது’ என்ற நிதர்சனம் நெஞ்சைக் குடைகிறது!

தன்னையே முன்மாதிரியாக நிறுத்துபவன் தான் தலைவனாக முடியும்! தன்னைத் தானே மறைத்துக் கொண்டு,தன்னைப்பற்றிய மாயைகளைக் கட்டமைத்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைகள் அவரை வருங்கால முதல்வராக கற்பித்து பக்கம்,பக்கமாக எழுதி குவித்த போதும்,தொலைகாட்சிகள் தன் அரசியல் பிரவேசம் பற்றி மயிர்பிளக்க விவாதித்த போதும் குளிர்காய்ந்து, கள்ள மவுனத்துடன் ரசித்து, அதனால்,தனது படவசூலையும் பெருக்கிக் கொண்டு, ’’நானா சொன்னேன்…! எனக்கு அப்படியொரு நினைப்பே இல்லையே..’’ என்றபோதே அவர் முற்றிலும் அம்பலமாகவில்லையா?

சரி,தனக்குத் தான் அந்த நினைப்பு இல்லை எனும் போது தகுதியானவர்களையாவது கண்டடைந்து அவர்களை ஊக்குவித்து,துணை நிற்கும் கடமையையாவது கடந்த காலத்தில் அவர் செய்தாரா? எந்த நேர்மையானஐ.ஏஎஸ்அதிகாரியையோ,ஐ.பி.எஸ் அதிகாரியையோ அங்கீகரித்து வாழ்த்தியிருப்பாரா? குன்ஹா போன்ற அநீதிக்கு தலைவணங்காத நீதிபதியை மதித்து என்றாவது ஒரு வார்த்தை போகிற போக்கிலாவது சொல்லியிருப்பாரா?

குறைந்த பட்சம் தான் விரும்பும் மாற்றத்தை தன் சினிமாகளின் வாயிலாகவாவது மக்களிடம் எடுத்துச் செல்லும் சமூக பொறுப்புள்ள கலைஞனாகவேனும் அவர் தன்னை வெளிப்படுத்தியுள்ளாரா?

’’கடந்த 50 ஆண்டுகால ஆட்சிகள் அவலம்’’ என்பவர்,கடந்த 40 ஆண்டுகளாக அப்படிப்பட்ட ஆட்சியாளர்களைத் தான் – அதுவும் சம்மந்தப்பட்டவர்களை வைத்தே – மேடைதோறும் புகழ்ந்து தள்ளினார் என்பதையும், அதிலும் எம்.ஜி.ஆர் ஆட்சியையே தான் தரவிரும்பியதாகக் கூறியதையும் நினைவுபடுத்திப் பார்த்தால், அவர் சொல்வது மாற்று அரசியலா? ஏமாற்று அரசியலா? என்பதற்கு தெளிவான விடை கிடைக்குமல்லவா?

கடந்த சில நாட்களாக ரஜினி இவரை பரிசீலிக்கிறார்,அவரை பரிசீலிக்கிறார் என்ற தகவல்கள் வருகின்றன! அவர் பரிசீலிப்பதாகச் சொன்ன ஒரு ஐ.ஏஎஸ் அதிகாரி, கிறிஸ்த்துவர், அதுவும் தமிழ் தேசிய சிந்தனையாளர் என்று அவரது நெருங்கிய வட்டாரம் எச்சரித்து பின்வாங்கவைத்துவிட்டதாம்!

இன்னும் சிலரிடமும் பேசப்பட்டாலும் இது வரை அவருக்கும் தங்களுக்கும் இணக்கமான புரிதல் இல்லாமல் எப்படி தீடீரென்று ஒத்துக் கொள்வது, அவரை எப்படி நம்புவது? என தடுமாறுகிறார்களாம்! ஆக,இன்னும் கட்சியே ஆரம்பிக்காமல் முதல்வர் வேட்பாளரைத் தேடும் வரலாறு காணாத அதிசிய மனிதர் தான் ரஜினி!

மன்மோகன் சிங்கை சோனியா நிறுத்தியது போல,ஒரு நல்ல, நேர்மையான நிர்வாகியை முதல்வராக முன் நிறுத்தி, தான் கட்சித் தலைவராக இருக்கலாம் என்று ரஜினி நினைத்தால்,அதில் தப்பென்ன? என சிலர் கேட்கிறார்கள்!

ஆட்சியைக் கொண்டு செலுத்துவதை விட கட்சியைக் கொண்டு செலுத்துவது தான் இருப்பதிலேயே அதிக கஷ்டமானது! ஏனெனில்,அது மனிதர்களைக் கையாளும் அற்புதக்கலை! பலதரப்பட்ட மனிதர்களின் ஒத்துழைப்பு,எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அனுசரித்து,புரிந்து இறங்கி கவனமாக செய்யும் வித்தகம் தான் அது!

அரசியலில் கடுகளவும் அனுபவம் பெறாத ரஜினியால் எப்படி கட்சிக்காரர்களை கையாளமுடியும்? ஆனால்,ரஜினியோ, ’கட்சி நிர்வாகப் பதவிகள் என்பவையே அவசியமற்றது. கல்யாணவீட்டிற்கு வந்து வேலைபார்ப்பவர்கள் போல,தேர்தல் வேலைகளுக்கு மட்டும் தேவைப்படுபவர்களே கட்சி நிர்வாகிகள்’ என தன் இயக்கத்தினருக்கு சமூக அடையாளம் கூட தரமறுக்கும் அரசியல் அறியாமையில் ரஜினி உழலும் போது,அவர் பின்னால் நிற்கவும்,செயல்படவும் யாருமே முன்வரமாட்டார்கள் என்பதே நிதர்சனம்!

எல்லாவற்றையும் விட ஒரு மக்கள் தலைவனால் மட்டுமே கட்சி நடத்த முடியும்,ஆட்சித் தலைவனை மக்களுக்கு அடையாளப்படுத்தவும் முடியும்! மக்கள் தலைவன் என்றால், வெற்றி,தோல்விகளைப் பொருட்படுத்தாமல், மக்களோடு களத்தில் நிற்பவன் என்பதே அதன் அடையாளமாகும்!

அவரது அரசியல் பிரவேசம் பற்றி மீண்டும் மீடியாக்கள் விவாதித்துக் கொண்டிருக்க, அவரோ,அடுத்தடுத்து ஒவ்வொரு சினிமாவாக நடித்துச் செல்வதிலேயே காரியாத்தமாக உள்ளார்! சுயமரியாதையும்,சுய சிந்தனையும் உள்ளவர்கள் இப்படிப்பட்ட சுயநலமே குறிக்கோளாக கொண்டவரை பின்தொடரமுடியுமா?

எல்லாம் போகட்டும்! நேர்மையான ஆட்சி தர விரும்பும் ரஜினிக்கு ஒரு விண்ணப்பம்! உங்களால் நேர்மையாக ஒரு சினிமாவையாவது தர முடியுமா?

அதாவது, உங்கள் பட டிக்கெட்டுகளை ஆயிரம்ரூபாய்,இரண்டாயிரம் ரூபாய் என்றில்லாமல், நேர்மையான வகையில் உரிய கட்டணங்களில் மட்டுமே கிடைக்கும்படியேனும் உங்களால் உத்திரவாதப்படுத்த முடியுமா? இந்த ஒரு விவகாரத்திலாவது உங்கள் நேர்மையை நிருபிக்கமுடிமா?

– சாவித்திரி கண்ணன்