பேச்சுலர் படத்திற்கு பிறகு வெளிவரும் ஜி.வி.பிரகாஷ் படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, தயாரிப்பாளர் டி.ஜி.குணாநிதி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் படத்தை வாங்கி வெளியிடும் எஸ்.தாணு பேசியதாவது: இந்த படம் கமர்ஷியலாக இருப்பதற்கு நாங்கள்தான் காரணம். நாங்கள்தான் அதை கண்டுபிடித்தோம். படம் பார்ப்பவர்கள் கண்கலங்குவார்கள். இந்தப் படம் மூன்று மடங்கு லாபத்தை தரும். அதில் மாற்றமே இல்லை. மதிமாறன் மிகச்சிறப்பான படமாக எடுத்துள்ளார். அடுத்த படம் மதிமாறன் எங்கள் நிறுவனத்துக்கு இயக்க வேண்டும்.
ஜி.வி.பிரகாஷூக்கு ஒரு சவாலான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த படம் ஜி.வி.பிரகாஷூக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். கவுதம் மேனனின் நடிப்பு ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு. இயக்குனர் மதிமாறன் சொன்ன தேதியில் செலவை குறைத்து சரியாக படத்தை முடித்துக் கொடுத்தார். என்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின் கூறியதாவது… ‘ என் நண்பன் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் இன்று அங்கீகரிக்கப்படும் மேடை இது. வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம். என் உதவி இயக்குநர்களிடம் வெற்றிமாறன் ஜெயித்துக்கொண்டே இருப்பான் என்று சொன்னேன். அப்படி வெற்றியின் பட்டறையில் வந்தவன்தான் மதிமாறன்.
மதிமாறனின் முன் வெற்றி தெரிகிறது. வெற்றிமாறன் 24 மணி நேரமும் சினிமாவை நேசித்து நேசித்து படம் எடுக்கிறான்..அதன் அவனுக்கு வெற்றிகள் குவிகிறது. இந்தப்படம் ஒரு கமர்சியல் படமாக இருக்கும். தற்போது இருக்கும் தலைமுறையினரின் பார்வை ரொம்ப அழகாக இருக்கிறது. இந்த டிரைலரில் ஒரு ஷாட்டில் சுப்பிரமணிய சிவா திறமையாக நடித்திருக்கிறார்.
சாமியின் காலில் விழுந்தால் ஒன்றும் கிடைக்காது. என்னை பொருத்தவரை நல்லபடம் எடுப்பவன்தான் சாமி. மதிமாறன் நல்ல படம் எடுத்தால் நிச்சயமாக அவர் காலிலும் விழுவேன்” என கூறியுள்ளார்.