மாபெரும் வெற்றி பெற்ற நானி தெலுங்கு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து விரைவில் வெளிவரவுள்ள படம் தான் “சிவகாமி”. மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்று போன நிலையில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சாமி படமாக ஆவிகள், பேய்களை அடக்கும் அம்மன் படமாக ஹாரர் கலந்து கலக்க வருகிறது “சிவகாமி” திரைப்படம். இத்திரைப்படத்தை எம்.டி.சினிமாஸ் வெளியிடுகிறது. தமிழில் வெளியாக தயாராகிவரும் இப்படத்தின் இசை விழா (27.02.2020) அன்று தனியார் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழு பத்திரிக்கையாளர்கள், பிரபலங்களான நடிகர் தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர், நடிகர் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், எம்.டி.சினிமாஸ் ஏ.எம்.சௌத்ரி, உட்பட விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு பேசியதாவது:-
நடிகர், தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர் பேசும்போது,
என் நண்பன் சௌத்ரி முதன் முதலாக இந்த படத்தை பார்த்து நன்றாக இருப்பதாக சொன்னார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பெண் குழந்தை பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளார்கள். இப்படம் பெண் குழந்தை பாதுகாப்பை பேசும் படம். அதனால் கண்டிப்பாக இந்த படத்தை இயக்குங்கள் என்று சொன்னேன். இன்று CAA, NPR, பற்றி தவறான தகவல்கள் கூறி உறவுகளாக உள்ள இந்து, இஸ்லாம் மக்களை பிரிக்கின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இஸ்லாமியர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என உறுதி அளித்துள்ளார். இங்கு ராதாரவி தான் கதாநாயகன். எனக்காக அவர் வந்துள்ளார். இந்த படத்தை நல்ல முறையில் ஏ.எம்.சௌத்ரி கொண்டு வந்துள்ளார். நீங்கள் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் நன்றி என்றார்.
எம்.டி.சினிமாஸ் ஏ.எம்.சௌத்ரி பேசும்போது,
ஜே.எம்.பஷீர் சாருக்கு நன்றி. அவரால் தான் இந்த படம் செய்கிறேன். அவர் நிறைய பேருக்கு உதவி செய்துள்ளார். எனக்கும் செய்துள்ளார். ராதாரவி அண்ணணுக்கு என் நன்றிகள். பெண் குழந்தை பாதுகாப்பை பேசும் படம் இது. அதனால் தான் இப்படத்தை செய்கிறேன். அரசாங்கம் பெண் குழந்தை பாதுகாப்பு நாளை அறிவித்துள்ளது அதற்கு நன்றிகள். இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
தேவதானம் பேசும்போது,
ஜே.எம்.பஷீர், எம்.டி.சினிமாஸ் ஏ.எம்.சௌத்ரி ஆகியோர் தான் என்னை வழிநடத்தினார்கள். அவர்களால் தான் இந்த படம் உருவானது என்றார்.
பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது,
நான் படத்தில் நடிக்கும் முன் ராதாரவியிடம் ஆலோசனை கேட்டேன். கடுமையாக திட்டிவிட்டார். பொறாமையில் சொல்கிறார் என நான் நடிக்க போய்விட்டேன். ஆனால், அவர் சொன்னது நல்லதற்குதான். கஷ்ட காலங்களில் நிறைய நல்ல அறிவுரை தருவார். நான் சினிமாவில் 40 கோடிகளை இழந்திருக்கிறேன். மீடியாவில் என்னைப் பற்றி நிறைய தவறான தகவல்கள் வந்துவிட்டது. பரவாயில்லை. நான் எல்லாவற்றிலும் ஜெயித்து வருவேன். இங்கு ரஜினி சாருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். விரைவாக கட்சி தொடங்குங்கள். என்னை சேர்த்து கொள்ளுங்கள், என்னை துணை முதல்வர் ஆக்கிவிடுங்கள். இல்லையென்றால், நான் கட்சி ஆரம்பிக்கிறேன். நீங்கள் வந்து சேர்ந்து விடுங்கள். “சிவகாமி” படம் பார்க்க நன்றாக இருக்கிறது. படம் வெற்றி பெற பட குழுவுக்கு வாழ்த்துகள் என்றார்.
நடிகர் ராதாரவி பேசும்போது,
இங்கு வந்திருக்கும் என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு வாழ்த்துகள். என்னை திட்டுவதும் வாழ்த்துவதும் பத்திரிக்கை நண்பர்கள் தான். அவர்களுக்கு நன்றி. “சிவகாமி” படம் மிக அருமையான படம். காட்சிகள் மிக பிரம்மாண்டமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் மிகத் திறமையாக உழைத்துள்ளார். இப்படத்தில் பணிபுரிந்துள்ள எனது டப்பிங் குடும்ப நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள். இசை வெளியீட்டில் அரசியல் பேசினால் அது வைரலாகி விடுகிறது. எனது வேலையை விட்டுவிட்டு நான் CAA வுக்கு ஆதராவாக பேசப்போகிறேன். நான் வாழும் காலத்தில் இந்தியாவுக்கு ஆதரவாகவே பேசுவேன். இந்த “சிவகாமி” படம் சமூகத்திற்கு தேவையான படம். பெண் பாதுகாப்பு தற்போதைய காலகட்டத்தில் அவசியமான தேவையாக இருக்கிறது. இந்த படத்தில் சுஹாசினி தவிர அனைவரும் புதுமுகங்கள். ஆனால், படத்தை பிரம்மாண்டமாக எடுத்துள்ளார்கள். கதாநாயகி அழகாக இருக்கிறார். சாமி மாதிரியே இருக்கிறார். மோடி, அமித்ஷா பற்றி பேச இங்கு நான் வரவில்லை. அதற்கு வேறு இடம் இருக்கிறது. இப்படத்தில் பணிபுரிந்துள்ள தேவதானம் கிறிஸ்து, இந்து சாமியை பற்றிய படம், ஜே.எம்.பஷீர் எனும் முஸ்லிம் உதவியில் இப்படத்தை வெளியிடுகிறார்கள். மூன்று மதமும் ஒன்று சேரும் படமாக இப்படம் இருக்கிறது. அனைவரும் இப்படத்தை வாழ்த்த வேண்டும். நாம் இந்தியர் எனும் எண்ணம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். CAA வை எதிர்க்க சொல்லி கையெழுத்து வாங்குவதற்கு பதில் இப்படத்தை பார்க்க சொல்லி கையெழுத்து வாங்கலாம். CAA பற்றி ஒன்றுமே தெரியாமல் தான் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். அவர்களை விசாரித்தால் உண்மை வெளிவந்துவிடும். கேவலமாக இருக்கிறது. CAA வேண்டாம் என இப்போது சொன்னால் எதிர்காலத்தில் இங்கே நமக்கு இடமே இருக்காது. அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும். பட்டியல் போடுவது தான் NRC. பட்டியல் போட்டால் தான் நமக்கே நம்மைபற்றி தெரியும். என் வீட்டில் எத்தனை பேர் என எனக்கு தெரிய வேண்டுமல்லவா?நல்லவேளை என் தந்தை காலத்தில் NRC இல்லை. அப்படி கணக்கெடுத்திருந்தால் ஊர் ஊராக அலைந்திருக்க வேண்டும். நம்மை பற்றி தெரிந்துகொள்ள NRC அவசியம். அத்தனை மதங்களும் இணைந்து இந்தியாவை காக்க வேண்டும். பெண் குழந்தையை காக்க வேண்டும் என இந்த படம் சொல்கிறது. எல்லோரும் இந்த படத்தை பாருங்கள், வாழ்த்துங்கள் நன்றி என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியாக, சிறப்பு விருந்தினர்களால் ‘சிவகாமி’ படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது. இப்படம் ஜே.எம்.பஷீர் தலைமையில் வெளியாகும்.