தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் அமீர் இயக்கத்தில் 2007ம் ஆண்டு பிப்ரவரி 23ந் தேதி வெளியானது.
முதல் படத்திலேயே அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ், சிறுத்தை, கொம்பன், தோழா, காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
பருத்தி வீரன் படத்தில் அறிமுகமாகி, தற்போது 15 ஆண்டுகள் ஆனதையொட்டி கார்த்திக்கு வலைத்தளத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் கார்த்தி நன்றி தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருத்திவீரன் படத்தில் இருந்து எனது நடிப்பை தொடங்கியதை பெருமையாக கருதுகிறேன். எனது ஒவ்வொரு அசைவும் அமீரால் வடிவமைக்கப்பட்டது. எனவே, எல்லா புகழும் அவரையே சாரும். நிறைய கற்றுக்கொண்டேன். அவர் கற்றுக் கொடுத்ததை பின்பற்றுகிறேன். இந்த அழகான பாதையில் என்னை அழைத்துச் சென்ற அமீருக்கும், எனது ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.