Monday, September 9
Shadow

ஆறாம் நிலம் – விமர்சனம்

ஈழத்துக்குப் பிறகும் அங்குள்ள மக்கள் இன்னமும் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை உலக நாடுகள் அறிய வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட படம் தான் இந்த “ஆறாம் நிலம்”.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈழத்து போர் முடிவுக்கு வந்தபிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் சிங்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்கள் அதன் பிறகு என்ன ஆனார்கள் என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் என்பது போல தான் இன்னமும் இருக்கிறது.

இப்படி சரணடைந்து காணாமல் போனவர்களை இழந்து அவர்களது குடும்பங்கள் தவிப்பதையும், அவர்களின் அன்றாட வாழ்க்கையின் துயரங்களையும் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சி தான் இப்படத்தின் கதை.

கண்ணிவெடி அகற்றும் வேலைக்கு நவயுகா செல்வதில் இருந்து தொடங்கும் படம் போர் முடிந்தும் தமிழர்கள் வாழ்வு மேம்படாததை உரைக்கிறது.

மருமகளும், பேத்தியும் நம்பிக்கையுடன் தன் மகனைத் தேடிக் கொண்டிருக்க, அந்தத் தாய்க்கே மகன் வருவான் என்ற நம்பிக்கை இல்லாமல் போவதும், ஆனால் தன் தந்தை வந்துவிடுவார் என்று சிறுமி நம்புவதும் கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள்.

கண்ணி வெடியைத் தேடுகையில் மனித எலும்புக் கூடு கிடைப்பதும், ஒரு இடத்தில் அந்தக் கண்ணிவெடி வெடித்து ஒரு பெண் காயப்படுவதும் கூட பதற வைக்கும் பகுதிகள்.

சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த கணவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் அவரை தேடும் மனைவி, அப்பா எப்போது வருவார்? என்ற கேள்வியுடனும், ஏக்கத்துடனும் காத்துக்கொண்டிருக்கும் மகள். இந்த இரண்டு கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த தமிழ் ஈழ மக்களின் இதய வலிகலை நமக்கு புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் அனந்த ரமணன்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் நவயுகா மற்றும் அவரது மகளாக நடித்திருக்கும் தமிழரசி, இருவரும் பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, நடிப்பது போல் இல்லாமல் நம் கண் முன் வாழ்கிறார்கள். கண்ணிவெடிகளை அகற்றும் வேலையில் கண்காணிப்பாளராக வரும் மன்மதன் பாஸ்கி மிகவும் கண்ணியமான கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.மற்ற கதாப்பாத்திரங்களையும் நடிகர்களாக பார்க்க முடியாதபடி இயல்பாக நடித்திருக்கிறார்கள்

கன்னிவெடிகளை தேடி எடுக்கும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சிவ சாந்தகுமார் அனைவரையும் சீட்டின் நுனியில் அமர வைத்துவிடுகிறார். பின்னனி இசையில் சிந்தக்கா ஜெயக்கொடி கதையோடு பயணம் செய்ய வைத்துள்ளார்.

இந்த அரிய முயற்சியைத் திரைப்படமாக எடுத்த இயக்குநர் ஆனந்த ரமணனுக்கும், அந்த முயற்சியை முன்னெடுத்த ஐபிசி தமிழுக்கும் பாராட்டுகள்.