கரோனாவினால் இப்போது இருக்கக் கூடிய ஊரடங்கு எப்போது முடிவிற்கு வரும் என்று பலர் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த ஊரடங்கால் தினக் கூலிகள் அதிகளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கரோனாவின் பரவல் கட்டுக்குள் வந்ததும் ஒவ்வொரு துறையும் மெல்ல மெல்லத்தான் மீண்டு வர முடியும். அதிலும் சினிமாத் துறை மீண்டு வர பல மாதங்கள் ஏன் வருடங்கள் கூட ஆகும். ஏற்கெனவே தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இனி கரோனாவிற்குப் பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பினாலும் தியேட்டர்களுக்கு வந்து சினிமா பார்க்க பழைய கூட்டம் வருமா என்பது சந்தேகமே. குறைந்தது ஆறு மாத காலத்திற்கு தியேட்டர்கள் உட்பட கூட்டமான இடத்தை 60% மக்கள் புறக்கணித்துவிடுவார்கள்.
இந்த ஊரடங்கில், அத்தியாவசிய செலவுகளுக்கு தங்கள் சேமிப்பிலிருந்துதான் மக்கள் செலவு செய்திருப்பார்கள். மீண்டும் ஒரு சேமிப்பை உருவாக்கிக் கொள்வதுதான் அவர்களின் பிரதான நோக்கமாக இருக்கும். தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறையும்போது படங்கள் பெரும் நஷ்டம் அடையும். அதிகப்படியான நஷ்டம் ஏற்பட்டால் திரைப்படங்கள் எடுக்கும் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விடும். படங்கள் எடுக்கும் எண்ணிக்கை குறைந்து விட்டால் சினிமா படப்பிடிப்புகளை நம்பி வாழ்வாதாரத்தைக் கொண்டவர்கள் நிலை மீண்டும் கேள்விக்குறி ஆகும்.
திரையரங்கத் தொழிலில் மிகப் பெரிய ஜாம்பவானான பி.வி.ஆர் சினிமாஸ், இருக்கைகளுக்கு இடையில் உடல் ரீதியான தூரத்தை பராமரிக்க முடிவு செய்துள்ளது. பி.வி.ஆர் சினிமாஸ் தலைமை நிர்வாக அதிகாரி கெளதம் தத்தா, ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் இடைவெளி விட்டு தான் இனி ரசிகர்களை அமர வைத்து பார்க்க வைக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இது வணிக ரீதியாக அவர்களுக்கு இழப்பென்றாலும், நுகர்வோரின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதே தங்கள் பிராண்டின் முயற்சி எனக் கூறுகிறார். இது குறித்து தி இந்து நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், “இது 4-6 வாரங்களுக்கு எடுக்கப்படும் ஒரு குறுகிய கால நடவடிக்கை,” என்று கூறினார். தியேட்டர் வளாகங்களில் சமூக இடைவெளி குறித்து பி.வி.ஆர் சினிமாஸ் சிந்தித்துள்ளது நிச்சயம் வரவேற்கத்தக்கது.
மாயாஜால் சினிமாஸின் நிர்வாக இயக்குனர் உதீப் பி, இது குறித்து பேசும் போது, “ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் தியேட்டர்களை சுத்தம் செய்வோம். எங்களிடம் காகித டிக்கெட்டுகள் இருக்காது, அதற்கு பதிலாக எம்-டிக்கெட்டுகள் இருக்கும், ”என்று அவர் கூறினார். மேலும், குறைந்தது அடுத்த ஒரு வருட காலம் இந்தத் துறைக்கு கடினமான சவால்கள் காத்திருக்கின்றன எனக் கூறியுள்ளார்.
ஏஜிஎஸ் சினிமாஸில் இருக்கை ஏற்பாடுகளை எவ்வாறு செய்வது என்று ஆலோசித்து வருகிறது. சுகாதாரம் குறித்தும், ரசிகர்களுக்கு வெப்பநிலை சோதனைகளை எவ்வாறு செய்ய முடியும் என்றும் திட்டமிட்டு வருகிறது. மேலும், இருக்கைகளில் ‘டிஸ்போஸபிள்’ கவர்களை பயன்படுத்தவும் முயற்சித்து வருகிறது. அதே போல ரோஹினி சினிமாஸும், சமூக இடைவெளி, இருக்கைகள் குறித்து முடிவெடுத்து வருகிறது. அதே சமயம், வரவிருக்கும் வாரத்தில் நிலைமை எவ்வாறு அமையும் என்பதை பொருத்து செயலாற்ற காத்திருக்கிறது.
தமிழ்நாடு 1,213 திரைகளையும், 6.36 லட்சத்துக்கும் மேற்பட்ட இருக்கைகளையும் கொண்டுள்ளது. மதிப்பீடுகளின்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் ஒரு நாள் மூடுவது என்பது சராசரியாக 8 கோடி ரூபாய்(ஒரு நாளைக்கு)இழப்புக்கு வழிவகுக்கும். எனவே, ஊரடங்கு காலம் முடிந்த பின்னர் நிச்சயம் அவை மீண்டும் செயல்பட்டால் தான் தங்கள் இழப்பை சரி கட்டமுடியும்.
கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனித்தனி திரையரங்குகளிலும் இதே போன்ற திட்டங்கள் உள்ளன. மதுரை தியேட்டரின் உரிமையாளர் ஒருவர் இது குறித்து கூறுகையில்,“உணவு மற்றும் பானங்கள் பிரிவில் கூட்டம் வருவதைத் தவிர்ப்பதற்காக, இருக்கைகளுக்கு உணவு வழங்குவதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். மெனு திரையில் காண்பிக்கப்படும், மேலும் ஆர்டர்களை எடுக்க எங்கள் பணியாளர்கள் இருக்கைகளுக்கே வருவோம்,” என்று அவர் கூறினார்.
முக்கியமான படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், திரையரங்குகள் மற்ற பணிகளை விட, சுகாதாரம் குறித்தும் சிந்திக்க வேண்டி உள்ளது. இருக்கைகளில் இடைவெளி விடும் போது, அது வணிகத்தை பாதிக்கும் பட்சத்தில் வெளியாகும் படங்களை அதிக எண்ணிக்கையிலான நாட்களில் ஓடவைப்பதன் மூலம் இருக்கைகளின் இழப்பை ஈடுசெய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். மேலும், தமிழக அரசு எந்த வகையான வழிகாட்டுதல்களை தியேட்டர்களுக்கு வழங்கவுள்ளது என்பதும் முக்கியமாகும். தயாரிப்பாளர்கள் முதல் இயக்குநர்கள் வரை, தொழில்நுட்ப வல்லுநர்கள் முதல் நடிகர்கள் வரை, லாக் டவுன் அனைவரையும் பாதித்துள்ளது. எனவே அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்ய வேண்டும், திரைப்பட பார்வையாளர்களிடையே மீண்டும் நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டும் என்பதே திரையரங்க உரிமையாளர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது.