திரைப்படத் துறை சார்ந்த அனைத்து பணிகளும் முடங்கியுள்ள நிலையில் தங்களை முன்னிலைப் படுத்திக்கொள்ள தொலைக்காட்சி, தயாரிப்பாளர்கள், தொழிலாளர் அமைப்பு சார்ந்த நிர்வாகிகள், நிர்வாகிகள் இல்லாத அமைப்பு சார்ந்தோர் பணிகளை தொடங்க அனுமதி வழங்குமாறு அறிக்கைகள் வெளியிடுவதும் மனு அளிப்பதும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
எல்லோருக்கும் அருள் பாலிப்பவராக செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, சினிமா பிரபலங்களை சந்திக்கத் தயக்கம் இன்றி அனுமதித்து வருகிறார். மதுபானக் கடைகளையே திறந்து விட்டார்கள், நமக்கும் அனுமதி கிடைத்துவிடும் என்ற பெரும் நம்பிக்கையுடன் திரைத் துறையினர் காத்திருக்கின்றனர்.
இதற்கு இடையில் மே 25 அல்லது ஜுன் முதல் வாரம் திரையரங்குகளைத் திறக்க தமிழக முதல்வர் அனுமதி அளிக்க உள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் சங்க உறுப்பினர்களுக்கு ஆடியோ பதிவின் மூலம் அறிவித்திருக்கிறார்.
அதில், “நாம் ஏற்கனவே தமிழக அரசிடம் சில கோரிக்கைகளை நிறைவேற்றித் தர கேட்டு தமிழக அரசிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரை அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப் படவில்லை
நமது கோரிக்கைகளான
1. ஃபிலிம் நடைமுறையில் இருந்த போது ஆபரேட்டர் உரிமம் அவசியமானது. தற்போது டிஜிட்டல் முறைக்குத் திரையிடல் மாற்றமடைந்திருப்பதால் ஆப்பரேட்டர் உரிமம் வேண்டியதில்லை. அதனை ரத்து செய்ய வேண்டும்.
2. வருடத்திற்கு ஒரு முறை திரையரங்கிற்கான உரிமத்தை புதுப்பிக்கும் நடைமுறையை 3 வருடமாக மாறுதல் செய்ய வேண்டும்.
3. அதிக இருக்கை அனுமதியுள்ள பெரிய திரையரங்குகளை சிறிய திரையரங்குகளாக மாறுதல் செய்து கொள்ள பொதுப்பணித்துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி பெற்றால் போதுமானது.
4. புதிய திரையரங்குகள் அமைக்கும் போது மொத்த இடத்தில் 10% காலியிடம் ஒதுக்க வேண்டும் என்கிற விதியை ரத்து செய்ய வேண்டும்.
5. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லாத 8% கேளிக்கை வரி தமிழகத்தில் அமுலில் உள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றி தராத பட்சத்தில் திரையரங்குகளை திறந்து நடத்துவது பெரும் இழப்பை நமக்கு ஏற்படுத்தும். ஏற்கனவே கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் மிகப்பெரும் நஷ்டத்தில் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
இக்கோரிக்கைகள் சம்பந்தமாக தலைமை செயலக வட்டாரத்தில் விசாரித்த போது, “கடந்த 15 ஆண்டுகளாக இக்கோரிக்கைகள் கருணாநிதி, ஜெயலலிதா முதல்வர்களாக இருந்தபோது வலியுறுத்தப்பட்டு வந்தவை.
அமைச்சர்கள் ஆவன செய்ய ஆர்வம் காட்டினாலும் துறை சார்ந்த அதிகாரிகள் இக்கோரிக்கைகளை அமுல்படுத்துவது சட்ட சிக்கலை ஏற்படுத்தும், மக்கள் அதிகமாக கூடும் இடம் என்பதால் பாதுகாப்புக்கான விதிமுறைகளில் தளர்வு, சமரச போக்கை கடைப்பிடிக்க முடியாது என்பதில் உறுதியாக இருகின்றனர்” என்று கூறப்படுகிறது.