Monday, September 9
Shadow

விஜய் ஆண்டனி இயக்கத்தில் “பிச்சைக்காரன் 2” திரைப்படம் இனிதே துவங்கியது !

விஜய் ஆண்டனி, தற்போதைய தமிழ் திரைத்துறையில் பல்வேறு துறைகளிலும் சாதனை படைக்கும் கலைஞன். இசை இயக்குனராக, பல அதிரடியான வெற்றிபெற்ற ஆல்பங்களின் மூலம், பிரமிக்க வைக்கும் சாதனை படைத்தவர். ஒரு நடிகராக ரசிகர்களிடத்திலும் விநியோக தளத்திலும் பெரும் வெற்றியை பெற்று, முன்னணி நடசத்திரமாக வலம் வருகிறார். தற்போது பிச்சைக்காரன் 2 மூலம் இயக்குநராக தனது அடுத்த பயணத்தை துவங்கியுள்ளார்

இன்று காலை சென்னையில், படக்குழுவினர் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொள்ள மிக எளியமையான பூஜையுடன் “பிச்சைக்காரன் 2” படப்பிடிப்பு துவங்கியது. பூஜையில் கலந்துகொண்ட அனைத்து பங்கேற்பாளர்களும் உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளை கடைப்பிடித்து கலந்து கொண்டனர். தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் S.A. சந்திரசேகர் அவர்கள் பூஜையில் கலந்து கொண்டு வாழ்த்த, விஜய் ஆண்டனி மிகுந்த உற்சாகத்தில் இருந்தார். மேலும் இந்த சிறப்பு தருணத்தில் தமிழ் திரையை சேர்ந்த 17 இயக்குனர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். எஸ்.ஏ.சந்திரசேகர், ராதா ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குநர்கள் சசி (பிச்சைக்காரன்), பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சைத்தான்), G.சீனிவாசன் (அண்ணாதுரை), கணேசா (திமிருபிடிச்சவன்), நவீன் (அக்னி சிறகுகள்), ஆனந்த கிருஷ்ணன் (கோடியில் ஒருவன்), பாலாஜி K குமார், தனஞ்செயன், ஃபெப்சி சிவா, கமல் போஹ்ரா, சித்தார்த், B பிரதீப் மற்றும் இன்னும் பல முக்கிய பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் S.A. சந்திரசேகர் குத்துவிளக்கை ஏற்றி துவக்கி வைக்க, இயக்குனர் சசி கேமராவை ஆன் செய்தார், இயக்குனர் விஜய் மில்டன் முதல் ஷாட்டிற்கு கிளாப்போர்டைத் தட்டினார்.

பிச்சைக்காரன் 2 படத்தை Vijay Antony Film Corporation சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.