தான் நடித்து வந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக தனது சம்பளத்தை நடிகர் விஜய் ஆண்டனி குறைத்துள்ளார்.
‘பிச்சைக்காரன்’, ‘கொலைகாரன்’ போன்ற திரைப்படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து நிற்கும் விஜய் ஆண்டனி, தற்போது ‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’, ‘காக்கி’ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
2020 ஆம் ஆண்டில் வெளியாகும் திட்டத்துடன் எடுக்கப்பட்டு வந்த இந்த திரைப்படங்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக முடங்கிப் போயிருக்கிறது. 50 நாட்களுக்கும் மேலாக எந்த விதமான வேலைகளும் நடைபெறாமல் இருக்கும் நிலையில், படப்பிடிப்பில் இருந்த பல தமிழ் திரைப்படங்களும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு முடியாமல் தவித்து வருகின்றன.
போஸ்ட் புரொடக்ஷன் உட்பட அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படங்கள் கூட திரையரங்குகள் இல்லாத காரணத்தினால் வெளிவர இயலாத சூழலில் மாட்டியுள்ளது. இவ்வாறு இக்கட்டான நிலையில் தவித்து வரும் தனது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக நடிகர் விஜய் ஆண்டனி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தன்னை நம்பி திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்னும் விதத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட சம்பளத்திலிருந்து 25 சதவீதத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு விஜய் ஆண்டனி, தான் நடித்து வந்த மூன்று திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
இந்த சம்பளக் குறைப்பின் மூலமாக மூன்று தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் மொத்த பட்ஜெட்டை குறைத்துக் கொள்ளவும், அதன் வழி விரைவில் வேலைகளை முடித்து படத்தை வெளியிடும் வாய்ப்பையும் விஜய் ஆண்டனி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
விஜய் ஆண்டனியின் இந்த முடிவு குறித்து அவர் நடித்து வந்த ‘அக்னி சிறகுகள்’ படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா கூறும்போது,“50 நாட்களுக்கு மேலாக இந்த கொரோனா லாக் டவுன் காரணமாக தவித்து வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு இப்படி ஒரு முன்னணி நடிகர் தாமாகவே முன்வந்து தன் சம்பளத்தை குறைத்துக் கொண்டது அனைவரும் பாராட்ட வேண்டிய, தமிழ் சினிமாவுக்கு முன்னுதாரணமாக இருக்க போகும், ஒரு நடவடிக்கை. அவரை போலவே அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியையே தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுத்து அனைத்து தயாரிப்பாளர்களையும் இந்த இக்கட்டான நேரத்தில் காப்பாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன். அப்படி செய்தால் தான், தற்போது வெளியாக காத்திருக்கும் படங்களும், முடிக்கவிருக்கும் படங்களும் எந்த நிதி சிக்கலும் இல்லாமல் வெளியாகும். இப்படி ஒரு முன்னுதாரணமான செயலை செய்து தயாரிப்பாளர்களுக்கு உதவும் விஜய் ஆண்டனியை மனதார பாராட்டுகிறேன். அவர் மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்.” என்று விஜய் ஆண்டனியைப் பாராட்டியுள்ளார்.