ஊரில் செல்வாக்காக வாழ்ந்து வரும் பி.ஆர்.வி குடும்பத்தின் இளைய மகன் அருண் விஜய். இவர் குடும்பம் மீதும் அண்ணன்கள் சமுத்திரகனி, போஸ் வெங்கட், சஞ்சீவ் மீதும் அதிக பாசத்துடன் இருக்கிறார். இவர்கள் குடும்பத்திற்கும் ஜெயபாலன் (சமுத்திரம்) குடும்பத்திற்கு தீராத பகை இருந்து வருகிறது. சமுத்திரம் குடும்பத்தை சேர்ந்த ராமசந்திர ராஜு, அருண் விஜய் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்.
இந்நிலையில், அருண் விஜய்யின் அண்ணன் மகள் அம்மு அபிராமி, காதலுடன் ஓடி செல்கிறார். இதற்கு காரணம் அருண் விஜய்தான் என்று கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள். இறுதியில் அருண் விஜய் குடும்பத்துடன் இணைந்தாரா? ராமசந்திர ராஜுவிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருண் விஜய் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தாய் பாசம், அண்ணன் பாசம், அண்ணன் மகள் பாசம், காதல் என அனைத்தையும் தாங்கி சுமந்து இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதகளப் படுத்தி இருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், நடனம் ஆடத்தான் கஷ்டப்பட்டிருக்கிறார்.
தனக்கே உரிய பாணியில் அசத்தி இருக்கிறார் சமுத்திரகனி. அதுபோல் ராதிகா சரத்குமார் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்திருக்கிறார் ராமசந்திர ராஜு. ராஜேஷ், ஜெயபாலன், போஸ் வெங்கட், சஞ்சீவ், அம்மு அபிராமி, ஐஸ்வர்யா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் சிரிக்கவும், ஒரு இடத்தில் அனுதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார் யோகி பாபு.
தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் படத்தை இயக்கி இருக்கிறார் ஹரி. கமர்ஷியல் படங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து ரசிக்க வைத்து இருக்கிறார். காதல், அப்பா மகள் பாசம், அண்ணன் பாசம், தாய் பாசம், என குடும்பத்தினர் கவரும் வகையில் உருவாக்கி இருக்கிறார் ஹரி. அதுபோல் வசனங்களும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகளுக்கு வரும் பின்னணி இசையில் மாஸ் காண்பித்து இருக்கிறார். எஸ்.கோபிநாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.